க்ரைம்

சிவகாசி | காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசி அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகாசி அருகே கிளியம்பட்டியை சேர்ந்தவர் பிலாவடியான். இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களது மகள் தங்கம்மாள்(25), வெம்பக்கோட்டை அருகே கல்லமநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். தங்கம்மாள் வேலைக்கு செல்வதற்காக புதிதாக ஸ்கூட்டர் வாங்கினார். தங்கம்மாளின் சித்தி மகனான ராஜபாளையத்தை சேர்ந்த மோட்சராஜா(23) என்பவர் அவருக்கு ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக் கொடுப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

அப்போது தங்கம்மாளை காதலிப்பதாக மோட்சராஜா தெரிவித்துள்ளார். அதற்கு தங்கம்மாள் மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மே 19-ம் தேதி தங்கம்மாள், அந்தோணியம்மாள், மோட்சராஜா ஆகிய மூன்று பேரும் ஸ்கூட்டரில் சென்றனர். அப்போது, கல்லமநாயக்கன்பட்டி தனியார் பாலிடெக்னிக் அருகே வைத்து, அந்தோணியம்மாள் கண் முன்னே துப்பட்டாவால் தங்கம்மாளின் கழுத்தை இறுக்கி மோட்சராஜா கொலை செய்தார்.

இதுகுறித்த புகாரில் ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மோட்ச ராஜாவை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மோட்சராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

SCROLL FOR NEXT