தஞ்சாவூர்: திருவையாறு அருகே பள்ளிவாசல் ஜமாத் தலைவருக்கு பார்சலில் மண்டை ஓடு அனுப்பப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த முகமதுபந்தரில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் தலைவராக இருப்பவர் ஏ.எம்.முகமது காசிம்(64). இவருக்கு நேற்று முன்தினம் இரவு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அதை நேற்று காலை அவர் பிரித்துப் பார்த்தபோது, அதில்மனித மண்டை ஓடு இருந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து திருவையாறு போலீஸாருக்கு தகவல்தெரிவித்தார். இதையடுத்து, திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்பர், வேலாயுதம் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, அந்த பார்சல் அனுப்பியவர் பெயர் நவ்மன்பாய் கான் என்றும்,செல்போன் எண்ணும் இருந்தது. ஆனால், அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பார்சலை அனுப்பியது யார்? எதற்காக அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.