பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட தம்பதி கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.
கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (27). இவர் மனைவி ரேஷ்மாவுடன் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கெளரிநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ரேஷ்மா 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி இவரது வீட்டுக்கு கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார். சுஜய்க்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது, சுஜய்யின் வீட்டுக்குள் மாணவி கொலை செய்யப்பட்டு கிடந்தார். சுஜய்யும், ரேஷ்மாவும் தலைமறைவாகினர். மகாலிங்கபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து இருவரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பதுங்கி இருந்த சுஜய், ரேஷ்மாவை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சுஜய்யும், ரேஷ்மாவும் காதலித்துள்ளனர். இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் சுஜய் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுபலட்சுமியை காதலித்துள்ளார். அதேநேரம், சுஜய் முன்னாள் காதலியான ரேஷ்மாவை திருமணம் செய்துகொண்டு பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டிக்கு வந்து குடும்பம் நடத்தி வந்தார். மேலும், அடிக்கடி சுபலட்சுமியுடனும் ரகசியமாக பேசிவந்துள்ளார்.
இந்நிலையில்தான், சுஜய்க்கு திருமணமானதை அறிந்த சுபலட்சுமி கடந்த 2-ம் தேதி அவது வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சுபலட்சுமிக்கும் ரேஷ்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த ரேஷ்மா கத்தியால் சுபலட்சுமியை குத்தியுள்ளார். இதில் சுபலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமறைவான இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.