உயிரிழந்த சுப்புராயலு, கோவிந்தன். (கடைசி படம்) கைதான பள்ளி தாளாளர் சிமியோன். 
க்ரைம்

மீஞ்சூரில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு: பள்ளி தாளாளர் கைது

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: மீஞ்சூரில் தனியார் பள்ளி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுதொடர்பாக பள்ளி தாளாளரை போலீஸார் கைது செய்தனர்.

மீஞ்சூர் நேதாஜி நகரில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளி விடுமுறை நாள் என்பதால் மீஞ்சூர் பேரூராட்சியின் நிரந்தர துப்புரவு பணியாளரான கோவிந்தன்(45), தற்காலிக பணியாளரான சுப்புராயலு (45) ஆகிய இருவர் நேற்று பள்ளியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் இருவரும் மயக்கமடைந்து தொட்டியினுள் விழுந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீஸார், வடசென்னை அனல் மின் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து உள்ளே சென்று இருவரையும் மீட்டபோது, அவர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மீஞ்சூர் போலீஸார், தனியார் பள்ளியின் தாளாளரான, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சிமியோன் என்பவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT