க்ரைம்

நாகை - இந்திய கடற்படை முகாமில் தமிழக வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகையில் உள்ள இந்திய கடற்படை முகாமில் நேற்று அதிகாலை தமிழக வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகை துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படை முகாம் உள்ளது. இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு, கமாண்டர் தலைமையில் 50-க்கும் அதிகமான வீரர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், முகாமுக்குள் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. இதையடுத்து, வீரர்கள் அங்கு சென்று பார்த்தபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் வட்டம் காமாட்சி அம்மன் பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ்(28), கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இன்சாஸ் ரக துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ், அந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கடற்படை அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில், நாகை டிஎஸ்பி பழனிச்சாமி, நாகை நகர இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீஸார் கடற்படை முகாமுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், ராஜேஷின் சடலத்தை, நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக நாகை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். 2015-ல் கடற்படையில் சேர்ந்த ராஜேஷ், 2021 முதல் நாகை கடற்படை முகாமில் பணியாற்றி வந்தார். ராஜேஷுக்கு மனைவி இலக்கியா, 6 மாத பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

SCROLL FOR NEXT