பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

சைபர் குற்றங்களுக்கான தலைமையிடமாக விளங்கும் ஹரியாணா நூஹ் மாவட்டத்தில் 300 இடங்களில் 5,000 போலீஸார் தீவிர சோதனை: 125 குற்றவாளிகள் கைது

செய்திப்பிரிவு

நூஹ்: ஹரியாணா மாநிலத்தில் உள்ள நூஹ், ராஜஸ்தானில் பாரத்பூர், உத்தரப் பிரதேசத்தில் மதுரா ஆகிய நகரங்களை இணைக்கும் எல்லைப் பகுதி சமீப ஆண்டுகளில் சைபர் குற்றச் செயல்களுக்கான தலைமையிடமாக மாறியுள்ளது. இப்பகுதியுள்ள சிறிய கிராமங்களில் முகாமிட்டு கணினி மற்றும் இணைய வசதியைப் பயன்படுத்தி சைபர் குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

மொபைல் எண்ணுக்கு போலி மெசேஜ் அனுப்பி அதன் மூலம் பணம் அபகரித்தல், ஜி பே, போன்பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு போலி இணைப்புகளை அனுப்பி அதன் மூலம் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் திருடுதல், ஏடிஎம் கார்டு மோசடி, சிம் கார்டு மோசடி என விதவிதமான சைபர் குற்றங்கள் இந்தப் பிராந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு நடத்து வருகிறது.

இந்நிலையில் ஹரியாணா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் போலீஸார் மிகப் பெரிய சோதனை நடத்தியுள்ளனர். இதில் 125 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைபர் மோசடிகளில் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் சைபர் குற்றச் செயல்கள் காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இக்குற்றச் செயல்களைத் தடுக்க ஹரியாணா மாநில காவல் துறை இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் இந்தச் சோதனையில் 5,000 போலீஸார் ஈடுபடுத்தப் பட்டதாகவும், அவர்கள் 102 குழுக்களாக பிரிந்து நூஹ் மாவட்டத்தில் உள்ள 14 கிராமங்களில் 300 இடங்களில் சோதனை நடத்தியதாகவும் ஹரியாணா மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த சோதனை குறித்து டிஐஜி சிமர்தீப் சிங் கூறுகையில், “இந்த அதிரடி சோதனையை எப்படி அரங்கேற்றுவது என்று ஒரு மாதம் திட்டமிட்டோம். இதற் காக காவல் துறையினருக்கு தனி பயிற்சி வழங்கினோம். ஹரியாணா மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போலீஸார் இந்தத் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். வியாழக்கிழமை காலை சோதனையை தொடங்கினோம். எங்களது இந்த நடவடிக்கையால் ஹரியாணாவில் சைபர் குற்றங்கள் குறையும். எங்கள் சோதனை மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT