சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய பெண் ஒப்பனை கலைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.
சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜு (27). இவர் மீது கஞ்சா விற்பனை உள்பட 7 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக நுங்கம்பாக்கம் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை நோட்டமிட்ட போலீஸார், திருமுல்லை வாயலில் பதுங்கி இருந்தபோது நேற்று முன்தினம் ராஜூவை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளிகள் சேத்துப்பட்டு அஜய் குமார் (27), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சாந்தி பிரியா (22) ஆகிய மேலும் இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, போதைப் பொருளாக பயன்படுத்தும் 75 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து போலீஸார் கூறும்போது “கைது செய்யப்பட்டுள்ள ராஜூ தற்போது திருமுல்லைவாயில் தங்கி சூளைமேடு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் ஆட்களை வைத்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பனை கலைஞர் சாந்தி பிரியாவுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரியாவின் கணவர் வழக்கு ஒன்றில் சிக்கி சிறையிலுள்ளார். இதனால், அவருக்கு பணத்தேவை இருந்துள்ளது.
இதையடுத்து, கடந்த 4 மாதங்களாக பிரியா ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து ராஜூவிடம் கொடுத்துள்ளார். ஒவ்வொரு முறையும் 10 கிலோவுக்கு குறையாமல் கஞ்சா கடத்தி வருவார். நவநாகரிகமான உடைகள் அணிந்து, சாப்ட்வேர் இன்ஜினியர் போலவே ரயில் பயணத்தின் போது சக பயணிகளிடம் தன்னை அவர் காட்டிக் கொண்டுள்ளார். ராஜுவை கைது செய்த போது அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே பிரியா சிக்கியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.