சங்கர் 
க்ரைம்

திருவள்ளூர் | பூந்தமல்லி அருகே பாஜக பிரமுகர் கொலை: கவுன்சிலர் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் சரண்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் உட்பட 9 பேர்எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள வளர்புரத்தைச் சேர்ந்தவர் சங்கர் (42). பாஜக பட்டியலினப் பிரிவு மாநிலப் பொருளாளரான இவர், வளர்புரம் ஊராட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

ஆலை கழிவுப் பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வந்த இவர் மீது, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சங்கர், பின்னர் காரில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

நசரத்பேட்டை சிக்னல் அருகே வந்தபோது, இரு கார்களில் வந்த மர்ம கும்பல் சங்கரின் காரை வழிமறித்து, 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர், காரிலிருந்து இறங்கி, சாலையின் எதிர்புறம் ஓடினார். எனினும், அந்த கும்பல் அவரைத் துரத்திச் சென்று, கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியது. இது தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தொழில் போட்டி காரணமா? - போலீஸார் கூறும்போது, ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட குமரன், சங்கரின் நெருங்கிய நண்பர். அவரைக் கொன்றது போலவே, சங்கரும் கொலை செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டிகாரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம்’’ என்றனர்.

இதற்கிடையே, சங்கர் கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் சாந்தகுமார், ஜெகன், குணா, சரத்குமார், ஆனந்த், மற்றொரு சாந்தகுமார், சஞ்சு, உதயகுமார், தினேஷ் ஆகிய 9 பேர் எழும்பூரில் உள்ள 14-வது குற்றவியல் நடுவர்நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

அவர்களை காவலில் எடுத்துவிசாரிக்கும்போதுதான், கொலைக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT