கணேசன். 
க்ரைம்

தி.மலை | 10 வயது சிறுமியை கொலை செய்த கூலி தொழிலாளிக்கு : இரட்டை ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த கூலி தொழிலாளிக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்தவர் 10 வயது சிறுமி. இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், தென்முடியனூர் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன.

இந்த தகவலறிந்த தண்டராம்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் மரணம் குறித்து, அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி விசாரணை நடத்தினார். மருத்துவப் பரிசோதனையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது உறுதியானது.

இதையடுத்து, சிறுமியின் கொடூர கொலைக்கு காரணமானவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டன.

இதில், தென்முடியனூர் கிராமத்தில் வசிக்கும் 58 வயதான கூலி தொழிலாளி கணேசன் என்பவர், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தண்டராம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

சாட்சிகள் விசாரணை நிறைவு பெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், கணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT