சென்னை: சென்னை கே.கே நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருகைதொகுதி பிரமுகராக இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். மேலும், ரவுடிகள்பட்டியலில் ‘ஏ’ பிரிவில் போலீஸாரால் வைக்கப்பட்டிருந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், ரமேஷ் நேற்று காலை 7.50 மணியளவில் வீட்டருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில்வந்து இறங்கிய 2 பேர் அரிவாளால் ரமேஷை வெட்டினர்.
ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அந்த 2 பேரும் விரட்டி, விரட்டி வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கொலையாளிகள் தாங்கள் வந்த அதே காரிலேயே தப்பினர்.
தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, ரமேஷ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரமேஷ் கொலை செய்யப்பட்ட காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிஉள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
ரமேஷ் கொலைக்கு முன் விரோதம் காரணமா அல்லது அரசியல் விவகாரம், குடும்ப விவகாரம் உட்பட வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகள் தப்பியகாரின் பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸார் கூறும்போது, ``கொலை நடந்த பாரதிதாசன் காலனி, 100 அடி சாலை சந்திப்பு பகுதி எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இப்பகுதியில் மாம்பலம் தாலுக்கா அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகியவை அருகருகே உள்ளன.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளபகுதி. இந்த பகுதியில் காலைநேரத்தில் கொலை நடந்திருப்பதுஅப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரமேஷ் தினமும் அப்பகுதியில் உள்ள டீக்டைக்கு வருவதை அறிந்தே கொலையாளிகள் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். கொலையான ரமேஷின் செல்போனை பறிமுதல் செய்துள்ளோம். அந்த எண்ணுக்கு கடைசியாகப் பேசியவர்களின் விவரத்தையும் சேகரித்து வருகிறோம். முதற்கட்டமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது'' என்றனர்.