சென்னை: கொடுங்கையூரில் வெடித்து சிதறிய மர்மபொருளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வெடித்துச் சிதறியது வெடிகுண்டா என்று தடய அறிவியல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ண மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் லாசர் (55). மெரினா கடற்கரையில் பேன்ஸி பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், வீட்டில் கோழிகளையும் வளர்த்து விற்பனை செய்து வந்தார். தற்போது, கோழி வளர்ப்புத் தொழிலை நிறுத்தி விட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே காலியாக இருந்த கோழி கூண்டுகளை லாசர் சுத்தம் செய்தார். அப்போது, கூண்டிலிருந்து மஞ்சள் நிறத்தில், நூல் சுற்றி இருந்த பந்து போன்ற பொருளை எடுத்து வெளியே போட்டார். அப்போது அது எதிர்பாராத பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
பல்வேறு கோணங்களில் விசாரணை: அதிர்ச்சியடைந்த லாசர், இது குறித்து கொடுங்கையூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். உதவி ஆணையர் தமிழ்வாணன், ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிதறிக் கிடந்த வெடிபொருள் துகள்களைச் சேகரித்து, அவற்றை தடய அறிவியல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வெடித்துச் சிதறியது நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனுமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.