புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தெற்கு டெல்லி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள சாகேத் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் தனது வழக்கறிஞருடன் அந்தப் பெண் நின்றிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
அந்தப் பெண்ணை குறி வைத்து நான்கு முதல் ஐந்து ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.
சாகேத் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ராதா என்ற பெண் காயமடைந்துள்ளார். அவரது வயிறு மற்றும் கையில் குண்டு பாய்ந்துள்ளது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞர் ராஜேந்திர ஜா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பார் கவுன்சிலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக ராஜேந்திர ஜா மீது ஐபிசி பிரிவின் 420-ன் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தின் வழியே தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்க போலீஸ் படையினர் விரைந்துள்ளதாக தெற்கு டெல்லியின் போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இதற்கு முன்பும் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் இது மாதிரியான துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.