கடலூர்: நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் துணை செயற்பொறியாளர் வீட்டில் இருந்து மான் கொம்புகள், தோல், நட்சத்திர ஆமைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப்பில் வசிப்பவர் ஸ்ரீதர்(54). இவர், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் மான் கொம்புகள், தோல், நட்சத்திர ஆமைகள் இருப்பதாக சென்னையில் உள்ள தமிழ்நாடு வன உயிரின கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், கடலூர் வனத்துறை அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில், வனவர் குணசேகர், வனக்காப்பாளர் தணிகாசலம் மற்றும் சென்னை தமிழ்நாடு வன உயிரின கட்டுப்பாட்டுப் பிரிவு குழுவினர் நேற்று முன்தினம் நெய்வேலி சென்று தர் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரது வீட்டில் இருந்த 4 மான் கொம்புகள், ஒரு மான் தோல், உயிருடன் 2 நட்சத்திர ஆமைகள் மற்றும் ஒரு பச்சைக்கிளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.