செங்கல்பட்டு: தந்தை கொலை செய்யப்பட்ட இடத்திலேயே மைத்துனரை கொலை செய்து அவருடைய தலையை வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் டார்ஜன்(35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆக.1-ல் ஏற்பட்ட தகராறின்போது மது போதையில் இருந்த டார்ஜன் மனைவி ஜெயந்தியை தாக்கினார். அதைத் தடுக்க முயன்ற ஜெயந்தியின் தந்தை துலுக்காணம்(65), தாய் சம்பூர்ணம் ஆகியோரை டார்ஜன் கட்டையால் தாக்கி கத்தியால் குத்தினார். இதில் துலுக்காணம் உயிரிழந்த நிலையில் சம்பூர்ணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டார்ஜன் ஜாமீனில் வெளியே வந்தார். இதை அறிந்த ஜெயந்தியின் சகோதரர்கள் சூர்யா(24), லோகேஷ் பாபு(24) ஆகியோர் தந்தையின் கொலைக்குப் பழி தீர்க்கும் வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலிருந்த டார்ஜனை வெட்டி கொலை செய்து தலையைத் தனியாக எடுத்து தந்தை உயிரிழந்த இடத்தில் வைத்துவிட்டு சென்றனர்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார் டார்ஜனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலையில் தொடர்புடைய டார்ஜன் மனைவியின் சகோதரர்கள் சூர்யா, லோகேஷ் பாபு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழிக்குப் பழியாக நடந்துள்ள கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.