க்ரைம்

சென்னை | ஆந்திர தம்பதியிடம் ரூ.60 லட்சம் வழிப்பறி: தலைமறைவாக இருந்த 4 பேர் கும்பல் சிக்கியது

செய்திப்பிரிவு

சென்னை: ஆந்திர தம்பதியிடம் ரூ.60 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி கிருஷ்ணாராவ். இவர் அதே மாநிலம் குண்டூர் மாவட்டம், மூர்ச்சுலா தாலுக்கா, துர்க்கி கிராமத்தைச் சேர்ந்த சுப்பாராவ் (48) மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் ரூ.60 லட்சம் பணத்தை கொடுத்து, இப்பணத்தை, சென்னையிலுள்ள தங்க நகை வியாபாரியிடம் கொடுத்து தங்க நகைகளை வாங்கி வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.

அதன்பேரில், சுப்பாராவ் மற்றும் அவரது மனைவி இருவரும் ரூ.60 லட்சத்துடன் கடந்த 12-ம் தேதி சென்னை வந்தனர். பின்னர், கொருக்குப்பேட்டை, பழைய கிளாஸ் பேக்டரி தெருவில் நகை வியாபாரிக்காக காத்திருந்தபோது அங்கு காரில் வந்த கும்பல் ஒன்று திடீர் தாக்குதல் நடத்தி, கத்தி முனையில் சுப்பாராவ் தம்பதியிடம் இருந்த பணத்தை பறித்துவிட்டு தப்பி ஓடியது.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், பணத்தை பறித்துக் கொண்டு தப்பியது தெலங்கானாவைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), அதே மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பத்தினி (32), அவரது தம்பி மதுபத்தினி (29), ஆந்திராவைச் சேர்ந்தபுன்னாராவ் (35) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.20.81 லட்சம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட புன்னாராவ், சுப்பாராவை, ஆந்திர மாநில தங்கநகை வியாபாரி கிருஷ்ணாராவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளதும், அதன்பேரில், சுப்பாராவ் பணத்துடன் சென்னை செல்வதை அறிந்து அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சுப்பாராவ் மற்றும் அவரது மனைவியிடம் இருந்து ரூ.60 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT