நாவலூர்: கேளம்பாக்கம் அருகே உள்ள நாவலூரில் உள்ள மதுக்கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் போலி 500 ரூபாய் நோட்டை கொடுத்து மாற்ற முயன்றார்.
அவரை மதுக்கடை ஊழியர்கள் தாழம்பூர் போலீஸில் பிடித்து ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கூட்டாளியான உத்தண்டி பகுதியைச் சேர்ந்த எபினேசனுடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எபினேசனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கின.
கைதான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.