க்ரைம்

கோவை | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வளர்ப்பு தந்தைக்கு 7 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாச்சிமுத்துகவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (42). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தபோது, அங்கு பணியாற்றிய பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு, அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

பின்னர், அந்தப் பெண், அவரது 14 வயது மகள், முத்துக்குமார் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், மனைவி வீட்டில் இல்லாதபோது, சிறுமிக்கு முத்துக்குமார் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி புகார் அளித்ததன் அடிப்படையில், போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமாரை கடந்த 2020 மே 25-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜி.குலசேகரன் நேற்று தீர்ப்பளித்தார். இதில், முத்துக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT