திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது கணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தில் வசிப்பவர் சின்னராசு (38). கானலாபாடி ஊராட்சி செயலாளர். இவரது மனைவி சூர்யா (32). சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்களது மகன்கள் லக்ஷன் (4), உதயன் (1). கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு உள்ளதால், அடிக்கடி குடும்பத்தில் தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், வட்ராபுத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தின் கிணற்றில் மனைவி மற்றும் 2 மகன்கள் விழுந்துவிட்டதாக, கீழ்பென்னாத்தூர் போலீஸுக்கு சின்னராசு இன்று அதிகாலை தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் 50 அடிக்கும் ஆழத்துடன் தண்ணீர் நிரம்பி இருந்த கிணற்றில் குதித்து 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் செவிலியர் சூர்யா, ஒரு வயது மகன் உதயன் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டது. கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, பிற்பகல் 2 மணியளவில் லக்ஷன் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து 3 பேர் உடல்களும், பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சின்னராசுவை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் கூறும்போது, ''கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், உறவினரின் சுப நிகழ்ச்சி பங்கேற்க சின்னராசு நேற்று (மார்ச் - 9-ம் தேதி) இரவு சென்றுவிட்டு, நள்ளிரவு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. மனைவி மற்றும் மகன்களை காணவில்லை. அவர்களை தேடி உள்ளார். அப்போது, விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அருகே சூர்யா பயன்படுத்திய செல்போன் இருந்துள்ளது.
இதனால் 2 மகன்களுடன் சூர்யா கிணற்றில் விழுந்துவிட்டதாக, தகவல் கொடுத்தார். அதன்பேரில் 3 பேரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மூலம் மீட்டுள்ளோம். குழந்தைகளுடன் சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக கணவர் சின்னராசு கூறுகிறார். இவர்களது மரணத்துக்கு வேறு காரணமா என்ற அடிப்படையிலும் விசாரணை தொடர்கிறது'' என்றனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |