க்ரைம்

செல்போன் பறித்தவர்களை பிடிக்க முயன்ற பெண் மீது தாக்குதல்: மதுரையில் ரவுடி கைது

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் செல்போன்களை பறித்து தப்பியவர்களை பிடிக்க முயன்ற பெண்ணை தாக்கிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (38). இவர் தனது நண்பருடன் மதுரை கூத்தியார்குண்டு பகுதியில் கடந்த 6-ம் தேதி கூலி வேலை பார்த்தார். அப்போது, மதிய நேரத்தில் அருகிலுள்ள கருப்பணன் கோயிலில் இவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அந்நேரம், கோயிலுக்குள் நுழைந்த இருவர், இசக்கிமுத்து அவரது நண்பரின் செல்போன்களை திருடிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினர்.

இதைப் பார்த்த இசக்கிமுத்து சத்தமிட்டார். உடனே, அருகில் இருந்த ராக்கம்மாள் என்ற பெண் இருவரையும் தடுத்தார். ஆனால், அவர்கள் ராக்கம்மாளை தாக்கி மிரட்டிவிட்டு தப்பினர்.

இது குறித்த புகாரின்பேரில், ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரித்தனர். அதில், கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (38), அவரது நண்பர் கல்யாணி (37) ஆகிய இருவரும் செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணன் கைது செய்யப்பட்டார். கல்யாணியை போலீஸார் தேடுகின்றனர்.

ரவுடியான கண்ணன் மீது, ஆஸ்டின்பட்டி, திருமங்கலம் நகர் காவல் நிலையங்களில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT