க்ரைம்

ஈரோட்டில் பெண் தொழிலதிபர் வீட்டில் திருட்டு: பெங்களூருவை சேர்ந்த இருவர் கைது

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்தவர் மஞ்சுளா தேவி (55). கிரானைட் தொழில் செய்து வருகிறார். மார்ச் 8-ம் தேதி கொல்கத்தாவுக்கு சென்ற மஞ்சுளா தேவி 15-ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டில் இருந்த 42 பவுன் தங்க நகை, ரூ. 6 லட்சம் மதிப்பிலான வைர நகை, ரூ 4.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. வீரப்பன்சத்திரம் போலீஸார் விசாரித்து, இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பழையபாளையத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குணா(22), நவீன் குமார்(23) என இருவரைக் கைது செய்துள்ளோம். இருவர் மீதும் பெங்களூருவில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஊரைச் சுற்றி வந்து, ஆட்கள் இல்லாத வீட்டை தேர்வு செய்து திருடி வந்துள்ளனர். பெங்களூருவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு வந்து, மஞ்சுளா தேவி வீட்டில் திருடியுள்ளனர்.

அவர்களிடமிருந்து 42 பவுன் தங்கநகைகள், ரூ.6 லட்சம் வைர நகைகள், ரூ.4.20 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வாகனம், இரண்டு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

SCROLL FOR NEXT