அரக்கோணம்: அரக்கோணம் அருகே பாம்பை கடித்துக்கொன்று வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த 3 இளைஞர்களை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சின்ன கைனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (33), எலெக்ட்ரீஷியன். இவரும், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (21), சந்தோஷ் (21) ஆகியோரும் கூட்டாக சேர்ந்து, கடந்த ஜன.10-ம் தேதி சின்ன கைனூர் ஏரிக்கரை அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, மோகனின் கை மீது ஏரிக்கரையில் இருந்த தண்ணீர் பாம்பு ஒன்று ஏறியுள்ளது. மேலும், அவரின் கையை கடித்ததாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த மோகன் பாம்பை கையில் பிடித்து, அதை துன்புறுத்த தொடங்கியுள்ளார். உடன் இருந்தவர்கள் அதை தங்களின் கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்தனர். மதுபோதையில் இருந்த மோகன், என்னை எல்லோரும் ‘பிணந்தின்னினு’ கூப்பிடுறீங்க அதை, இப்ப நிரூபிக்கபோறேன் என்று கூறி கையில் இருந்த பாம்பை வாயில் வைத்து பல்லால் கடித்து கொன்றார்.
பின்னர், தலை மற்றும் உடல் என இரு துண்டாக பாம்பை தரையில் வீசினார். இந்த வீடியோவை கடந்த ஜன.15-ல் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அது வைரலானதால், இதுகுறித்து வனஉயிரினங்கள் பாதுகாப்பு குழு அமைப்பினர் (சென்னை) ஆற்காடு வனசரக அலுவலர் அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையின் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.