சென்னை பூங்கா நகரில் நகைப் பட்டறை நடத்தி வருபவர்கள் அலாவுதீன் (26), சக்ஜத் (26). இருவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நகைப் பட்டறையில் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முகமூடி கொள்ளையர்கள் இருவர், அலாவுதீன், சக்ஜத்தை கத்தியைக் காட்டி மிரட்டி, சரமாரியாகத் தாக்கினர். அவர்களை அங்கேயே கட்டிப் போட்டனர்.
பின்னர் நகைப் பட்டறையிலிருந்த 50 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பினர். தகவலறிந்து தப்பியோடிய கொள்ளையர்களை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடினர். அப்போது கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார். விசாரணையில் பிடிபட்டவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுஜன்ராய் என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தப்பிய கொள்ளையன் அஜய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரிடம் இருப்பதால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அலாவுதீனிடம் வேலை செய்துவந்த இருவருக்கு தொடர்ந்து 4 மாதங்கள் சம்பளம் கொடுக்கவில்லையாம். இதனால் இருவரும் முதலாளிகளைத் தாக்கி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போகும்போது காஸ் சிலிண்டரை திறந்துவிட்டுச் சென்றுள்ளனர்'' என்றனர்.