க்ரைம்

இளைஞரை கொன்ற பெண் உட்பட 3 பேர் கைது - கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்ட சடலம் இன்று தோண்டி எடுப்பு

செய்திப்பிரிவு

நங்கநல்லூர்: பழவந்தாங்கல் பகுதியில் மாயமான தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்ததாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உடலை கோவளம் கடற்கரை பகுதியில் புதைத்ததாக அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து இன்று சடலத்தை தோண்டி எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவர் சென்னை நங்கநல்லூரில் உள்ள தனது சகோதரி ஜெயகிருபா வீட்டில் தங்கி, கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 18-ம் தேதி வேலைக்கு புறப்பட்டவர், பணி முடிந்ததும் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு செல்லப்போவதாக சகோதரியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாததால், சில நாட்களாக காத்திருந்த சகோதரி ஜெயகிருபாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய செல்போனை தொடர்பு கொண்டபோது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஜெயகிருபா புகார் அளித்தார்.

இந்தப் புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஜெயகாந்தனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி என்ற இடத்தில் செல்போன் சிக்னல் காட்டியது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி தனிப்படை போலீஸார் அங்கு விரைந்தனர். அங்கிருந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த என்னை ஜெயகாந்தன் தாம்பரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் முதலில் சந்தித்தார். அப்போதிலிருந்து அவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 2020-ல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோயிலில் வைத்து என்னை ஜெயகாந்தன் திருமணம் செய்தார். ஆனால் 2021-ல் அவரை விட்டுப் பிரிந்து புதுக்கோட்டைக்கு வந்துவிட்டேன்.

துண்டு துண்டாக வெட்டி...: இந்நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி ஜெயகாந்தன் மீண்டும் என்னை பார்க்க புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது என்னுடன் தகராறு செய்ததால், அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டைப்பை மற்றும் சூட்கேஸில் அடைத்து 20, 26-ம் தேதிகளில் கோவளம் கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்துவிட்டேன். இதற்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த பூசாரி வேல்முருகன் ஆகியோர் எனக்கு உதவினர். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாக்கியலட்சுமி உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். ஜெயகாந்தன் உடலை புதைத்த இடத்தை பாக்கியலட்சுமி போலீஸாரிடம் அடையாளம் கட்டினார். இதையடுத்து இன்று உடலை தோண்டி எடுக்க திட்டமிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT