க்ரைம்

சென்னை | பணத்தை திருப்பி தராததால் ஏலச்சீட்டு அலுவலகத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பணத்தை திருப்பி தராததால் ஏலச்சீட்டு அலுவலகத்தில் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை கெருகம்பாக்கம், ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (56). எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார். எம்ஜிஆர் நகரில் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வரும் செல்வம்என்பவர் நடத்தி வந்த ரூ.1 லட்சம் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார். பாதி சீட்டுகட்டிய நிலையில், சீட்டுமுதிர்வடையும் வரை சுப்பையாவால் சீட்டுப் பணத்தைக் கட்ட முடியவில்லை.

இதையடுத்து சீட்டிலிருந்து விலகிக் கொள்வதாகவும், 15 மாதங்களாகக் கட்டிய ரூ.50 ஆயிரம் பணத்தைத் திருப்பி தருமாறும் செல்வத்திடம் கேட்டுவந்தார். ஆனால் அவர் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வேதனை அடைந்த சுப்பையா கடந்த30-ம் தேதி இரவு 7 மணியளவில் செல்வத்தின் அலுவலகத்துக்குச் சென்று தீக்குளித்தார்.

வலியால் துடித்து, அங்கும் இங்குமாக ஓடிய சுப்பையாஅங்கிருந்த பெண் ஊழியர் காயத்ரியை எரியும் தீயுடன் பிடித்துக் கொண்டார். இதில்அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயத்ரி கே.கே.நகரில்உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சுப்பையா கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில்் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுப்பையா உயிரிழந்தார். காயத்ரிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT