சென்னை: சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாண்டியன்(75). இவர் தனது குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றார்.
பின்னர், பாண்டியன் விரைவு ரயிலில் மார்ச் 29-ம்தேதி புறப்பட்டு, மறுநாள் காலை சென்னை எழும்பூருக்கு வந்தார். அங்கிருந்து வீட்டுக்கு சென்று தனதுஉடைமைகளை சோதித்தபோது, 22 பவுன் நகைகள் அடங்கிய ஒரு பையை தவறவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீஸில் புகார் தெரிவித்தார்.
இதன்பேரில், எழும்பூர் ரயில்வே போலீஸார், அவர் பயணித்த 3 அடுக்கு ஏசி பெட்டியில் சோதனைமேற்கொண்டனர். ஆனால், அந்த பை மாயமாகிஇருந்தது.
இதையடுத்து, ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக, பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ரயில்வே போலீஸார் விசாரித்தனர்.
தொடர்ந்து, ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும், ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு படுக்கைவிரிப்புகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த, செங்கல்பட்டை சேர்ந்த ஜனார்த்தனன்(23), திண்டுக்கல்லை சேர்ந்த லோகராஜ்(27) ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் நகைகளை எடுத்துச்சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.