ஹரிபத்மன் 
க்ரைம்

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முன்னாள் மாணவிகள் 5 பேரிடம் போலீஸார் விசாரணை; கல்லூரி பேராசிரியர் தலைமறைவு

செய்திப்பிரிவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் மாணவிகள் 5 பேரிடம்போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள பேராசிரியரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. புகாருக்கு உள்ளான பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், நாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், பேராசிரியர் ஹரிபத்மன் தனக்குபாலியல் தொல்லை கொடுத்ததாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார்.

இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 30-ம் தேதி ஹைதராபாத் சென்ற ஹரிபத்மன், தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்ய அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீஸார் விரைந்துள்ளனர். மேலும், அவர் விமானம் வழியாக வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக்அவுட் நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஹரிபத்மன் மீது புகார் அளித்த மாணவி, தன்னைப்போல மேலும் 5 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மாணவிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ரகசிய விசாரணை: இதையடுத்து, தனிப்படை போலீஸாரில் ஒரு குழுவினர் கேரளாவிரைந்து, பாதிப்புக்கு உள்ளானதாகக் கூறப்படும் 5 மாணவிகளிடமும் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர்கள் கலாஷேத்ராவில் நடந்தபாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக பல்வேறு தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது. இந்த தகவல்களை போலீஸார் ரகசிய வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள ஹரிபத்மன் பிடிபட்டால், இன்னும் பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், அவரைக் கைது செய்ய தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT