கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்தவிருந்த 5.250 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பெண் விற்பனையாளர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, கர்நாடகாவிற்கு லாரி மூலம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அருண், எஸ்பி பாலாஜி, டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, எஸ்ஐக்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்டு குழுவினர் சனிக்கிழமை காலை ஓசூர் எஸ்எல்வி நகரில் உள்ள சர்தார்(32) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அங்கு நின்றிருந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 105 சாக்கு பைகளில் 5.250 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரேஷன் கடைகளில் இருந்து நேரடியாக: அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், சென்னத்தூர் மற்றும் சானசந்திரம் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி நேரடியாக வாங்கி, அதை கர்நாடகாவிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட சர்தார், சூளகிரி கிருஷ்ணபாளையம் மணிகண்டன்(35), கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி அரவிந்த்(24), வசந்த்(25), ஓசூர் அண்ணா நகர் ஜெயசங்கர் காலனியை சேர்ந்த, சென்னத்தூர் ரேஷன் கடை விற்பனையாளருமான உமாமாதேஸ்வரி(33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அரிசியை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், மாவட்டத்தில் தனி நபர்களிடமிருந்து ரேஷன் அரிசி வாங்கி கடத்தப்படுவது 95 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் இருந்து நேரடியாக கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என்றனர்.