வேலூர்: வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் கடந்த திங்கட்கிழமை தப்பி ஓடினர்.
இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, சென்னையில் வைத்து ஒரு சிறுவனை காவல் துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். அவரை வேலூருக்கு அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளனர்.
அதேபோல், பாதுகாப்பு இல்லத்தின் ‘ஏ’ தொகுதியில் உள்ள பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிய வந்தது. இதையடுத்து, 12 பேரையும் காவல் துறையினர் நேற்று முறைப்படி கைது செய்தனர். இவர்கள் 12 பேரையும் பார்ஸ்டல் சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.