சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விளையாட வேண்டி மூதாட்டியை, சுத்தியால் தாக்கி 17 பவுன் தங்க நகை கொள்ளையடித்த இளைஞரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அங்கமுத்து (80) . இவரது மனைவி நல்லம்மாள் (72). இருவரும் தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் வசித்து வந்தனர். கடந்த 1-ம் தேதி பாக்குமரங்களை குத்தகைக்கு கேட்டு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அங்கமுத்து சாப்பாடு வாங்க வெளியே சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நல்லம்மாளை இளைஞர் சுத்தியால் தாக்கி, அவர் கழுத்தில் இருந்தும், வீட்டில் இருந்த 17 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றார்.
இதுகுறித்து ஆத்தூர் ரூரல் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். போலீஸார் விசாரணையில், ஆத்தூர், பள்ளக்காடு பகுதியை சேர்ந்த பாக்கு மரங்களை குத்தகைக்கு எடுக்கும் கண்ணன் (28) என்பவர் மூதாட்டியை தாக்கி தங்க நகை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் கண்ணனை கைது செய்து, விசாரணை நடத்தினர்.
போலீஸார் விசாரணையில், கண்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாயை இழந்துள்ளார். தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டி, மூதாட்டியை சுத்தியால் தாக்கி, அவரிடம் இருந்து 17 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று, நகைக் கடையில் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. நகைக் கடையில் இருந்து தங்க நகையை மீட்ட போலீஸார், கண்ணனை ஆத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.