திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதியை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள் ரூ.70 ஆயிரம் ரொக்கம், 10 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தி.மலை அடுத்த கீழ்பென்னாத்தூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (67). இவரது மனைவி பிருந்தா (55). இவர்களது மகன் சூர்யா (30). இவர், திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். எம்.ஜி.நகரில் கணவர்-மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். வீட்டின் முன்பக்கம் உள்ள கடையில் மினி மாவு மில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கடையின் ஷட்டரை உடைக்க முயன்ற மர்ம நபர்கள் திடீரென வீட்டின் கதவை தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த தம்பதி இருவரையும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் உள்ளே தள்ளியுள்ளனர். அதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
இருவரையும் சரமாரியாக தாக்கிய முகமூடி கொள்ளையர்கள் பிருந்தா அணிந்திருந்த தாலி சங்கிலி, கம்மல் உள்ளிட்ட நகைகளை பறித்துக்கொண்டு படுக்கை அறையில் இருந்த பீரோக்களை உடைத்து அதி லிருந்த பொருட்கைளை கீழே வீசியுள்ளனர்.
பின்னர், பீரோவில் இருந்த சுமார் இரண்டரை கிலோ அளவுக்கு வெள்ளி பொருட்களையும், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்து தப்பினர். கொள்ளையர்கள் தாக்கியதில் பிருந்தாவின் வலது கண் பகுதி வீங்கியுள்ளது. வெங்கடாஜலபதிக்கு உடல் முழுவதும் உள் காயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் தப்பிய நிலையில் தம்பதி இருவரும் அளித்த தகவலின் பேரில் கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், டிஎஸ்பி குணசேகரன் மற்றும் கைவிரல் ரேகை நிபுணர்கள் நேற்று காலை விரைந்து சென்று வெங்கடாஜலபதி, பிருந்தா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த முகமூடி கொள்ளையர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த தம்பதியை தாக்கி மூகமூடி கொள்ளையர்கள் தங்க நகைகள், பணம், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் சலசலப்பை ஏற்படுத் தியுள்ளது.