சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் கைதான பணிப்பெண் மற்றும் கார் ஓட்டுநரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் போலீஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைதிருடப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை போலீஸில் கடந்த மாதம்புகார் அளித்தார். சந்தேகத்தின்பேரில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி (46), கார் ஓட்டுநர் வெங்கடேசன் (44) ஆகிய இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் இருவரும் நகையை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கடந்த 21-ம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈஸ்வரியிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் திருடிய நகைகளை விற்று அதன் மூலம் வாங்கப்பட்ட வீட்டுக்கான பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
60 சவரன் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 100 சவரனுக்கு அதிகமான நகைகள் மீட்கப்பட்டுள்ளது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே, இதைவிடவும் அதிகமானநகைகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது தந்தை ரஜினி, கணவர்தனுஷ் வீட்டிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறையில் அடைக்கப்பட்ட பணிப்பெண் ஈஸ்வரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர்.
அதன்படி, ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரையும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் இரண்டு நாட்கள் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து இருவரையும் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.