ராஜவர்மன் 
க்ரைம்

ஸ்ரீவில்லி. | தொழிலதிபரை கடத்திய வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 4 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு கடத்திய வழக்கில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட 4 பேரின் முன்ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிவகாசி அருகே சக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக நிர்வாகி ராஜவர்மன் (52), தங்கமுனியசாமி (30), இ.ரவிச்சந்திரன் (53) ஆகியோருடன் சேர்ந்து, சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். அதன்பின், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்ட மூவரும் தங்களது பங்கு தொகையை பெற்றுக்கொண்டு தொழிலில் இருந்து பிரிந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, ராஜவர்மன் உள்ளிட்டோர் ரவிச்சந்திரனிடம் ரூ.2 கோடி கேட்டு அவரை கடத்திச் சென்று மிரட்டினர். இது குறித்த நீதிமன்ற உத்தரவுப்படி, ராஜவர்மன், தங்கமுனியசாமி, நரிக்குடி ஊராட்சிஒன்றிய துணைத் தலைவர் ஐ.ரவிசந்திரன், இவரது மனைவி அங்காள ஈஸ்வரி( 50), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராஜேந்திரன், சிறப்பு சார்பு-ஆய்வாளர் முத்துமாரியப்பன் ஆகிய 6 பேர் மீது, ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, ராஜவர்மன், தங்கமுனியசாமி, ஐ.ரவிச்சந்திரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT