க்ரைம்

தஞ்சாவூர் | டாஸ்மாக் கடையில் கத்தியை காட்டி ரகளை செய்துவிட்டு கஞ்சா வியாபாரியை கொன்ற 3 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மது கேட்டு கத்தியைக் காட்டி ரகளை செய்துவிட்டு, பின்னர் கஞ்சா வியாபாரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த 3 இளைஞர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் கரந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு நேற்று முன்தினம் மாலை அரிவாள் மற்றும் கத்தியுடன் 3 இளைஞர்கள், டாஸ்மாக் பணியாளர்களிடம் மது கேட்டும், பொதுமக்களிடம் பணம் கேட்டும் மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, அந்த வீடியோவில் இருந்த இளைஞர்களை கிழக்கு காவல் நிலைய போலீஸார் தேடி வந்தனர்.

இதற்கிடையே, கரந்தை குதிரைக்கட்டி தெரு பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான பிரதீப்(23) என்பவரின் வீட்டுக்குச் சென்ற 3 இளைஞர்கள், பிரதீப்பை வெளியே அழைத்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, 3 இளைஞர்களும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பிரதீப்பை வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த கிழக்கு போலீஸார் அங்கு சென்று, பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டாஸ்மாக் கடையில் மது கேட்டு ரகளை செய்தவர்கள் கரந்தை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(26), கீழஅலங்கம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(25), வடக்குவாசல் பகுதியைச் சேர்ந்த சூர்யா(25) ஆகியோர் என்பதும், அங்கு மது கிடைக்காத நிலையில், கஞ்சா வியாபாரியான பிரதீப் வீட்டுக்குச் சென்று கஞ்சா கேட்டு மிரட்டியதும், அவர் கஞ்சா கொடுக்க மறுத்ததால், அவரை வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விக்னேஷ், சிவக்குமார், சூர்யா ஆகிய 3 பேரையும் போலீஸார் நேற்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரதீப் மீது திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT