கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்த வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சுப்பிரமணி. இவர், கடந்த 2021 ஏப்ரல் 16-ம் தேதி தனது வீட்டில் வாந்தி - மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக, சுப்பிரமணியின் தங்கை இந்திரா என்பவர் தியாக துருகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இவ்வழக்கில் காவல்துறை யினர் விசாரணை செய்ததில், உயிரிழந்த சுப்பிரமணியின் மனைவி செல்வி (37) என்பவ ருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்தஜெயமுருகன் (45) என்பவருக்கும் கூடா நட்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன் - மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் செல்வியும் ஜெயமுருகனும் சேர்ந்து சுப்பிரமணியன் அருந்தும் மதுவில், பூச்சிக் கொல்லி மருந்து கலந்து வைத்துள்ளனர். இதையறியாத சுப்பிரமணியன் அதைக்குடித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி கீதா தீர்ப்பளித்தார். அதில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் செல்வி, ஜெயமுருகன் ஆகிய இருவரும் குற்றவாளி என்று உறுதி செய்து, இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் ரூ.31,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் துறை அதிகாரிகள், நீதிமன்ற காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் பாராட்டுகளை தெரிவித்தார்.