காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள நவீன அரிசி ஆலையில், அரிசி சேமித்து வைக்கப்பட்டிருந்த கலன் உடைந்து இருவர் மீது கொட்டியதில், இருவரும் புதைந்து உயிரிழந்தனர்.
காரைக்குடி அருகே சாக்கோட்டையில், புதுவயலைச் சேர்ந்த குருசேகர் என்பவர் நவீன அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்த அரிசி ஆலையில், நேற்று மாலை அரிசியை பேக்கிங் செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அரிசியை சேமித்து வைத்திருந்த கலன் திடீரென உடைந்தது. கலனில் இருந்த பல டன் அரிசி கொட்டியதில், கண்டனூர் திலகர் திடலைச் சேர்ந்த முத்துக்குமார் (45), பிஹார் மாநிலம் பூர்ணியாவைச் சேர்ந்த குந்தன்குமார் (30) ஆகிய இருவரும் அதில் புதைந்தனர்.
இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இது குறித்து சாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆலை உரிமையாளர் குருசேகர், அவரது மகன் கண்ணன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.