கோவை: முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி ரூ.63.72 லட்சம் மோசடி செய்த 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) இன்று (மார்ச் 24) தீர்ப்பளித்துள்ளது.
கோவை ராமநாதபுரம், ஓம்சக்தி நகரில் 'ஒயிட் காலர் அசோசியேட்ஸ்' என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார், பணியாளர்களாக அவரது மனைவி விமலா, மாமியார் லட்சுமி, சரவணம்பட்டியைச் சேர்ந்த பி.முருகேசன், அவரது மனைவி பிரியா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தீபா ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக தொகை திரும்ப கிடைக்கும் என விளம்பரப்படுத்தினர்.
மேலும், அதிக முதலீடு செய்ய வாடிக்கையாளர்களை இணைத்துவிட்டால் டிவி, தங்க நாணயம், கார் போன்றவற்றை தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி மொத்தம் 5 பேர் ரூ.63.72 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணத்தை திருப்பி அளிக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுந்தராபுரத்தைச் சேர்ந்த பி.சம்பத்குமார் என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2018 ஜூன் 25-ம் தேதி புகார் அளித்தனர்.
இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, மொத்தம் ரூ.72 லட்சம் அபராதம் விதித்ததோடு, அபராத தொகையை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.கண்ணன் ஆஜரானார்.