கோவை: சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக தன்னை திருமணம் செய்த பெண்ணுடன், கோவை ஒண்டிபுதூரில் வாழ்ந்து வந்தார்.
இருவரும் கட்டிட வேலைக்கு சென்றுவந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மனைவி வேலைக்குச் சென்ற பிறகு, 9 வயதுடைய சிறுமியை மிரட்டி பிரகாஷ் கடந்த 2020 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பலமுறை தொடர்ச்சியாக பாலியல் வன் கொடுமை செய்துள்ளார்.
இதை அறிந்த சிறுமியின் தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு (போக்சோ) வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜி.குலசேகரன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், பிரகாஷூக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சத்தை அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் எனநீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பு வழங்கும்போது பிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.