க்ரைம்

ஐஸ்வர்யா வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகை திருடினாரா? - அதிக நகைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட வேலைக்கார பெண்ணிடமிருந்து, புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர் ரஜினி, தனுஷ் வீடுகளிலும் கைவரிசை காட்டினாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டுவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த சென்னை மந்தைவெளி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி (46), கார் ஓட்டுநர் திருவேற்காடு மனசுரா கார்டனைச் சேர்ந்த வெங்கடேசன் (44) ஆகிய இருவரிடமும் போலீஸார் விசாரித்தனர். இதில் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரும் கூட்டுசேர்ந்து ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கடந்த 21-ம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. ஐஸ்வர்யாவின் வீட்டில் திருடிய நகைகளை விற்று தனது கணவர் அங்கமுத்துவுக்கு அதிக முதலீட்டில் காய்கறி கடையை அமைத்துக் கொடுத்த ஈஸ்வரி, தனது 2-வது மகளுக்கு மளிகைக் கடையும் வைத்து கொடுத்துள்ளார்.

முதல் மகளுக்குத் திருமணம் செய்து வைத்திருப்பதுடன் சோழிங்கநல்லூரில் சுமார் ரூ.9 லட்சத்துக்குநிலம் வாங்கி போட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்று கணவர் அங்கமுத்து, ஈஸ்வரியிடம் போலீஸார் கேள்விஎழுப்பினர். ஆனால், அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்து ஈஸ்வரி திருடிய நகைகளில் பெரும்பாலானவை ரஜினி சீதனமாகக் கொடுத்தவை. இது தவிர தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்தபோதும் சில நகைகளைப் பரிசாக வழங்கி இருந்தாராம். இப்படி 18 ஆண்டுகளாக தனக்குக் கிடைத்த நகைகளையே ஐஸ்வர்யா லாக்கரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

லாக்கர் சாவி ஈஸ்வரியிடம் இருந்துள்ளது. இதை சாதகமாக்கி கொஞ்சம் கொஞ்சமாக ஈஸ்வரி திருடியிருப்பது தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யா தனது வீட்டிலிருந்து 60 பவுன் திருடுபோனதாகப் புகாரில் தெரிவித்த நிலையில் 100 பவுனுக்கு மேல் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கைது செய்யப்பட்ட பணிப்பெண், ஐஸ்வர்யா வீட்டில் மட்டும் அல்லாமல் அவரது தந்தை ரஜினிகாந்த், கணவர் தனுஷ் ஆகியோரது வீடுகளிலும் கைவரிசை காட்டியுள்ளாரா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரது வீட்டுக்கும் ஈஸ்வரி சர்வ சாதாரணமாகச் சென்று வந்துள்ளார். எனவே, அந்த கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. விசாரணையின் முடிவில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT