பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள். (உள்படம்) கைது செய்யப்பட்ட பாலமுருகன், சோமேஷ். 
க்ரைம்

சென்னை | விலை உயர்ந்த பைக்குகளை திருடிவந்த இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஓட்டேரி, அயனாவரம், கீழ்ப்பாக்கம் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(26). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி இரவு வீட்டு வாசலில் அவரது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, அது திருடுபோயிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாகச் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் துப்பு துலக்கப்பட்டது. இதில், சீனிவாசனின் இருசக்கர வாகனத்தைத் திருடியது ஓட்டேரி பாலா என்ற பாலமுருகன் (18), சூளை சோமேஷ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட சீனிவாசனின் வாகனம் உட்பட 8 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் ஓட்டேரி, அயனாவரம், டி.பி.சத்திரம், சிந்தாதிரிப்பேட்டை, நீலாங்கரை, திருமுல்லைவாயல் ஆகிய காவல் நிலைய எல்லையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைக் குறிவைத்துத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT