க்ரைம்

பழைய குற்றவாளிகள் தேடுதல் வேட்டை - சென்னையில் உள்ள விடுதிகளில் போலீஸார் சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள விடுதிகளில் பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

சென்னையில் குற்றச் செயல்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் செல்பவர்களை பிடிக்கவும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் 377 லாட்ஜ்கள், 100 மேன்ஷன்கள் என மொத்தம் 477 விடுதிகளில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். இங்கு பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சந்தேக நபர்கள், பொருட்கள் குறித்து தெரிந்தால் உடனே காவல் துறைக்கு தெரிவிக்குமாறும், உரிய அடையாள சான்று இல்லாதவர்களுக்கு அறை தரவேண்டாம் என்றும் போலீஸார் அறிவுறுத்தினர். சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகன தணிக்கையும் நடத்தப்பட்டு 7,195 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.

இதில், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 84 வாகனங்களும், உரிய ஆவணங்கள் இல்லாதது மற்றும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 58 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்களை அடையாளம் காணும் எஃப்ஆர்எஸ் கேமரா மூலம் 4,123 பேர் மீது சோதனை நடத்தி, 4 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். குற்ற நபர்கள், சந்தேக நபர்கள் குறித்து தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT