புதுச்சேரி: புதுவையில் அதிமுக நிர்வாகியை தாக்கி ரூ. 38 லட்சம் ரொக்கம், 80 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
புதுச்சேரி ரெயின்போ நகர் 6-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி (60). அதிமுக நிர்வாகியான இவர், மதுபான கடை மற்றும் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பு வந்தபோது காரில் வந்த 3 பேர் விலாசம் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி கருணாநிதியை மிரட்டினர்.
அவரது வாயில் துணியைக் கட்டி, வீட்டின் உள்ளே அழைத்து சென்று அவரைத் தாக்கி, பீரோவில் இருந்த ரூ.38 லட்சம் ரொக்கம் மற்றும் 80 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக கருணாநிதி பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதி சிங், ஆய்வாளர் நாகராஜ் தலைமையில்நேரில் வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக கருணாநிதியின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தட்டாஞ்சாவடி பெட்ரோல் நிலையத்தின் கேஷியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளே இச்சம்பவத்தில் ஈடுபட்டது சில அடையாளங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.