ராமநாதபுரம்: கமுதியில் பார்சல் கட்ட தாமதமாகும் என்றதால், உணவக உரிமையாளரின் விரலை கடித்து துப்பியவரை போலீஸார் கைது செய்தனர்.
கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு உணவகம் நடத்தி வருபவர் கதிரேசன் (50). இவர் கூட்ட நேரத் தில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார். இவர் பணியாளர்கள் யாரையும் வைத்துக் கொள்ளாமல், தனியாக இவர் ஒருவரே வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், முஷ்ட குறிச்சியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வழிவிட்டான் (45) என்பவர், பார்சல் சாப்பாடு வாங்க இந்த உணவகத்துக்கு வந்துள்ளார். அப்போது, பார்சல் சாப்பாடு கட்ட தாமதமாகும் என கதிரேசன் கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வழிவிட்டான், அருகில் கிடந்த சமையல் கரண்டியால் கதிரேசனின் தலையில் தாக்கியுள்ளார். தடுக்க முயன்ற கதிரேசனின் இடது கையின் ஆள்காட்டி விரலை கடித்து உணவகம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் துப்பிவிட்டு ஓடிவிட்டார்.
அங்கிருந்தவர்கள் துண்டான ஆள்காட்டி விரலின் பகுதியை தேடிப் பார்த்ததில் கிடைக்க வில்லை. உடனே, கதிரேசனை கமுதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வழி விட்டானை கைது செய்தனர்.