வெள்ளியை உருக்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி மதிப்பில் வெள்ளிப் பொருட்களை ஏமாற்றி மோசடி செய்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த வெள்ளி வியாபாரிகள். 
க்ரைம்

சேலம் | உருக்கக் கொடுத்த ரூ.1.5 கோடி மதிப்பிலான வெள்ளியை ஏமாற்றியதாக 4 பேர் மீது போலீஸில் புகார்

வி.சீனிவாசன்

சேலம்: வெள்ளியை உருக்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை ஏமாற்றி மோசடி செய்த வட மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வெள்ளி வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வெள்ளி வியாபாரிகள் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு வந்து, அளித்த புகார் மனுவின் விவரம்: “செவ்வாய்ப்பேட்டை, சையத் மாதர் தெருவில் பிரவீன் யாதவ், ஜாதவ், ராகுல் குருந்தவாடே, ராம் ரகுநாத் உள்ளிட்டவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக வெள்ளி உருக்கி கம்பி செய்யும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் வெள்ளி வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் வெள்ளியை உருக்கி தருவதாக கூறி 1.5 கோடி மதிப்பிலான வெள்ளிக் கட்டிகளை வாங்கிச் சென்றபின், வெள்ளியை திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து வட மாநில நபரிடம் கேட்டபோது, தகாத வார்த்தையில் பேசி வெள்ளியை வாங்கவில்லை என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி சையத் மாதர் தெருவுக்கு சென்று பார்த்தபோது, அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு சென்று விட்டனர். அவர்களை தொடர்பு கொண்டபோது, செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

எனவே, வியாபாரிகளிடம் இருந்து வெள்ளிப் பொருட்களை ஏமாற்றி மோசடி செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுத்து வெள்ளிப் பொருட்களை மீட்டு தர வேண்டும்” என வெள்ளி வியாபாரிகள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT