க்ரைம்

திருப்பூர் | வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக முகநூலில் வதந்தி பரப்பியவர் பிஹாரில் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி, பொய் செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும்வகையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், அவிநாசி காவல் நிலைய முதல் நிலைக்காவலர் வேல்முருகன் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது கடந்த 4-ம் தேதி இரவு 10 மணிக்கு தனது முகநூல் பக்கத்தை பார்த்தபோது, ‘ஹெட்லைன்ஸ் பிஹார்’ என்ற முகநூல் பக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் படுகொலை செய்யப்பட்டதாக தவறான தகவல் பதிவிடப்பட்டதை பார்த்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்படி, காவல் துணைக் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சித்ராதேவி, தலைமைக்காவலர்சந்தானம், முதல்நிலைக் காவலர்கள் கருப்பையா,முத்துக்குமார், காவலர் குமரவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த 10-ம் தேதி பிஹார்மாநிலத்துக்கு சென்ற தனிப்படை போலீஸார், அம்மாநில காவல்துறை உதவியுடன் மர்மநபரின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தனர். இதன் அடிப்படையில், ரத்வாரா என்ற இடத்தில் பதுங்கியிருந்த உபேந்திரா ஷனி (32) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT