சென்னை: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக வியாபாரிகள் 3 பேரை வடக்கு கடற்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலைத் தடுக்கும் வகையில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் பாரிமுனை, இப்ராஹிம் சாலை, தம்பு செட்டி தெரு சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களைச் சோதனை செய்த போது, அவர்கள் மெத்தம் பெட்டமைன் என்ற போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டது சென்னை ஏழுகிணறு முகமது இலியாஸ் (30), மண்ணடி லெப்பை தெரு பசீர் அகமது (24), கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மொய்தீன் சைபுல்லா (38) என்பது தெரியவந்தது. வியாபாரிகளான அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 25 கிராம் போதைப் பொருள், 5 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும்கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மெத்தம் பெட்டமைன் வகை போதைப் பொருள் ஒரு கிராமே பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.