செங்கல்பட்டு: நிலமோசடி வழக்கில் தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு கதிஜா பீபி மற்றும் மைமுன்தாரா ஆகியோர் மாமண்டூரில் தாங்கள் வாங்கிய 40 சென்ட் நிலத்தை சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி, ரங்கநாதன் ஆகியோருக்கு விற்பனை செய்தனர். இவர்கள் இருவரும் மாமண்டூரைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு நிலத்தை பொது அதிகார பத்திரம் (பவர்) எழுதி கொடுத்தனர்.
இந்நிலையில் நசிமா பீபி, யூசப், ஆசிம்பாஷா, அமர்பீபி, நிஷா ஆகியோர் இந்த நிலத்துக்குபோலி பத்திரம் தயார் செய்துள்ளனர். அதை கவுஸ் பாஷா என்பவருக்கு விற்பனை செய்தனர். அதன்பின்னர் மீண்டும் அதே நிலத்தை அதேபோல் போலி பத்திரம் தயார் செய்து மேலமையூரைச் சேர்ந்த அதிமுக காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமாருக்கும் விற்பனை செய்தனர்.
இந்நிலையில் நிலத்துக்கு பவர் வாங்கியிருந்த ராஜா, போலி பத்திரம் மூலம் நிலத்தை வாங்கிய அதிமுக நிர்வாகி மற்றும் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுராந்தகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நிலம் ராஜாவுக்கு உரிமையானது என்ற தீர்ப்பு வெளியானது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் ராஜாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பு ராஜவை தாக்கியதாக தெரிகிறது. இதில் தனது செவித்திறன், பற்கள் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ராஜா புகார் அளித்தார்.
இதையடுத்து எஸ்பி பிரதீப் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர். பின்னர் மாவட்டநில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் கவுஸ் பாஷா(தற்போது உயிருடன் இல்லை), நசீமா பீபி, யூசப், ஆசிம்பாஷா, அமர்பீபி, நிஷா மற்றும் அதிமுகஒன்றிய செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் நசிமா பீபி, நிஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் மற்றும் 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.