க்ரைம்

தந்தை, சகோதரியை கொலை செய்த இளைஞர்: மாங்காடு போலீஸார் கைது செய்து விசாரணை

செய்திப்பிரிவு

மாங்காடு: மாங்காடு, அடிசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வராஜ் (65), இசை பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி சாந்தி, சினிமா துணை நடிகை. இவர்களுக்கு பிரியா (38) என்ற மகளும், ராஜேஷ், பிரகாஷ் என இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பிரியாவின் வீட்டுக்குச் சென்ற பிரகாஷ் அங்கு தனது அக்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவை குத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இதில் பிரியா இறந்தார். இதையறிந்து அவரது தாய் மற்றும் அண்ணன் சம்பவ இடத்துக்கு வந்தனர். தனது தந்தையை காணவில்லை என வீட்டில் சென்றுபார்த்தபோது செல்வராஜ் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவறிந்து சென்ற மாங்காடு போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அதே பகுதியில் சுற்றித்திரிந்த பிரகாஷை கைது செய்து விசாரித்தனர். இதில் பிரகாஷ் சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்து வந்ததாகவும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் அடிக்கடி வீட்டில் பெற்றோர், அக்காவிடம் சண்டை போட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில்தான் நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தையை கொலை செய்துவிட்டு அதன்பிறகு அக்கா வீட்டுக்குச் சென்று அவரையும் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT