க்ரைம்

மதுரை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிய குழந்தை கடத்தல்: இளம்பெண் உட்பட 2 பேர் கைது

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிய 3 மாதக் குழந்தையை கடத்தியது தொடர்பாக பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள மட்டப்பாறையைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (27). இவரது மனைவி சையது அலி பாத்திமா (25). இவர்களது 3 மாதக் குழந்தை ஷாலினி. நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ரயிலில் வந்தனர். நள்ளிரவு என்பதால் ரயில் நிலைய முன் பகுதியில் குழந்தையுடன் தூங்கினர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் எழுந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்திருந்த குழந்தையைக் காணாமல் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரயில் நிலைய போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் மதுரை காளவாசல் பகுதிக்குச் செல்லும் ஆட்டோவில் மர்ம நபர் குழந்தையைக் கடத்திச் செல்வது தெரிந்தது.

உடனடியாக போலீஸார் அப்பகுதிக்குச் சென்றபோது, கடத்தப்பட்ட குழந்தையுடன் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து திலகர் திடல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் மேலூர் அருகே வெள்ளலூரைச் சேர்ந்த சேகர் மகன் போஸ் (35) எனத் தெரியவந்தது.

குழந்தை கடத்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த புருசோத்தமன் மனைவி கலைவாணி (33) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போஸ், கலைவாணி இருவரையும் போலீஸார் கைது செய்தனர். குழந்தையை கடத்திய போஸ் ஏற்கெனவே மதுரை ரயில் நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பிய வழக்கில் கைதாகி கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் விடுதலையானார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் பகுதியில் போஸ் வசித்தபோது, பக்கத்து வீட்டிலிருந்த கலைவாணி அறிமுகமாகி உள்ளார். அவர் மூலம் குழந்தையை விற்க போஸ் ஏற்பாடு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. குழந்தைக் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT