தஞ்சாவூர்: பிரதமரை அவதூறாக விமர்சித்து இ-மெயில் அனுப்பியதாகக் கூறி தஞ்சாவூர் இளைஞரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், திடீர் திருப்பமாக சிறுமியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகேயுள்ள பூண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35). எம்.காம். பட்டதாரி. இந்நிலையில், டெல்லியில் இருந்து வந்த சிபிஐகுழுவினர், அவரிடம் விசாரணைநடத்தினர். பிரதமர் அலுவலகத்துக்கு, அவதூறாக இ-மெயில் அனுப்பியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, 10 வயது சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்த விக்டர் ஜேம்ஸ்ராஜா, சர்வதேச கும்பலுடன் ஆபாசப் படங்களை பகிர்ந்து வந்ததாகவும், இதுதொடர்பாகவே அவரிடம் விசாரணை நடைபெறுவதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், விக்டர் ஜேம்ஸ் ராஜாமீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விக்டர் ஜேம்ஸ் ராஜாவை, 2 நாட்கள் தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, பிரதமர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் அவதூறாக தகவல் அனுப்பியது தொடர்பான விசாரணை நடைபெறுவதாகத் தெரிவித்தனர்.
ஆனால், தற்போது அவர்பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுக்கு, சிறுவர்களின் ஆபாசப் படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்வது போன்றநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் இன்டர்போல் போலீஸார் கேட்டுக் கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
விக்டர் ஜேம்ஸ் ராஜாவைப் போன்ற சிலர் ஒரு குழுவாக சேர்ந்து, சிறுவர் ஆபாசப் படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் விக்டர் ஜேம்ஸ் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.