க்ரைம்

சென்னை | நகை வியாபாரியை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட விவகாரம்: நகைக்கடை ஊழியரின் திட்டமிட்ட செயல்

செய்திப்பிரிவு

சென்னை: அரும்பாக்கத்தில் நகை வியாபாரியை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில் நகைக்கடை ஊழியரே கூட்டாளிகளை ஏவி வழிப்பறியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 5 பேர் கும்பலை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை, ஓஸ்வால் கார்டன் பகுதி சிபி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் ஜெயின் (47). நகை வியாபாரியான இவர் கடந்த13-ம் தேதி காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் நகையை விற்று விட்டு மீதியிருந்த சுமார் ஒன்றே முக்கால் கிலோ தங்க நகை, ரூ.6.25 லட்சம் ரொக்கத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்னை திரும்பினார்.

அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் அருகே வந்தபோது, அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல் வழிமறித்தது. நான்கு பேரும் ராஜேஷ்குமாரை தாக்கி, அவர் வைத்திருந்த தங்கநகை, பணத்தை வழிப்பறி செய்து தப்பினர். இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது காஞ்சிபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த காலிஷா (22), அதே பகுதி ஓலி முகமது பேட்டை ரஞ்சித் (22), ஹாரிப் முஸ்டாகிம் (22), அப்துல்ஹமீது (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 677 கிராம்தங்க நகைகள், ரூ. 4 லட்சம் ரொக்கம், 3 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘இந்த வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருக்கும் முகம்மது அசாருதீன், காஞ்சிபுரம் பகுதியில் ஒரு நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், நகை வியாபாரி ராஜேஷ்குமார் ஜெயினை நோட்டமிட்டு, தனது நண்பர்கள் மூலம் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். முகம்மது அசாருதீன் உள்பட 2 பேரை தேடி வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.

SCROLL FOR NEXT